தமிழகம்

“நிலவில் பிளாட்டினம் கொட்டிக் கிடக்கிறதா?” - இஸ்ரோ முன்னாள் தலைவர் விளக்கம்

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: “நிலவில் பிளாட்டினம் ஒன்றும் இல்லை. அதையும் தாண்டி நிறைய இருக்கிறது. அதனை ஆராய்ச்சி செய்வதற்காக நாம் தொடர்ந்து வேலை பார்த்து வருகிறோம்” என இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் உள்ள இந்திரா காந்தி பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று திருச்சி வருகை தந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு வந்தார். தெற்கு கோபுர வாயில் வழியாக வருகை தந்த அவர், பெரிய கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் சுந்தர் பட்டர் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செய்தனர். பெருமாள் அபயஹஸ்த சந்தனத்தை பிரசாதமாக வழங்கினர். அவருடன் கல்லூரி நிர்வாகிகள் சந்திரசேகர், அபர்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியது: சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தென் பாரத நாட்டில் முதல் முறையாக இச்சாதனை நடந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சந்திரயான்- 4 மற்றும் சந்திரயான்-5-க்கு அரசு அங்கீகரித்துள்ளது. இந்திய விண்வெளி மையத்தில் இருந்து நிலவுக்கு மனிதனை 2040-ம் ஆண்டு அனுப்புவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வரும் ஆண்டுக்குள் முன்னேற்பாடு பணிகளை நிறைவு செய்ய வேண்டும். அதற்காக முழுவீச்சில் தயாராகி வருகிறது.

இந்தியா சார்பில் பெரிய ராக்கெட் ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு NGLV ( Next Generation Launch Vehicle) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக நான் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். இருப்பினும் இஸ்ரோவில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.

ஆந்திர மாநிலத்துக்கு விண்வெளி ஆராய்ச்சி ஆலோசராக பணியாற்றி வருகிறேன். இளம் ஆராய்ச்சியாளர்கள் இஸ்ரோவில் சேர்வதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இளம் ஆராய்ச்சியாளர்கள் நன்றாக தயாராகி இஸ்ரோவுக்கு வாருங்கள்.

நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு இஸ்ரோவில் இருக்கிறது. இஸ்ரோவில் மட்டுமல்ல தனியார் ஆராய்ச்சி மையத்திலும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சுனிதா வில்லியம்ஸ் உடைய கதை அனைத்தும் அமெரிக்காவுடைய கதை. நமது கதை அல்ல... ஆனால், சுனிதா வில்லியம்ஸுக்கும், இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரை, பிரதமர் இந்தியாவிற்கு அழைத்துள்ளார். நாங்களும் அவருக்கு எக்ஸ் தளம் மூலமாக அழைப்பு விடுத்துள்ளோம்” என்றார்.

பிளாட்டினம்?!: “நிலவில் பிளாட்டினம் இருப்பதாக ஒரு தகவல் பரவுகிறது. உண்மையிலேயே இருக்கிறதா? என்ற கேள்விக்கு, "இதற்காக அஸ்ட்ரோ மைனிங் என்ற புரோகிராம் இருக்கிறது. அதற்காக பல நாடுகள் வேலை பார்த்து வருகின்றன. நாமும் அதற்கான பணிகளை செய்து வருகிறோம். நாம் வீனஸ் என்ற புரோகிராம் அதற்காக அறிமுகம் செய்து உள்ளோம். பிளாட்டினம் மீது மிகுந்த ஆர்வமாக இருக்கிறீர்கள். அங்கு பிளாட்டினம் ஒன்றும் இல்லை. அதையும் தாண்டி நிறைய இருக்கிறது. அதனை ஆராய்ச்சி செய்வதற்காக நாம் தொடர்ந்து வேலை பார்த்து வருகிறோம்.” என்று பதிலளித்தார்.

SCROLL FOR NEXT