தமிழகம்

கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்கிற நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிரீமிலேயர் வருமான வரம்பு சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் கடந்த 8 ஆண்டுகளாக இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. 2017-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 8 ஆண்டுகளில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்திருக்கிறது. அதை சமாளிக்கும் வகையில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானமும் உயர்ந்துள்ளது. அதற்கு இணையாக கிரீமிலேயர் வரம்பு 2020-ம் ஆண்டில் ரூ.12 லட்சமாகவும், 2023-ம் ஆண்டில் ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யப்படாததால் கடந்த சில ஆண்டுகளில் வருவாய் அதிகரித்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு, இட ஒதுக்கீட்டு வரம்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். இதை விட பெரிய சமூக அநீதி இருக்க முடியாது. இந்நிலையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயனடையும் வகையில், கிரீமிலேயர் பிரிவினரை தீர்மானிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பை ரூ.8 லட்சத்திலிருந்து கணிசமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளின்படி 2017-க்குப் பிறகு 2026-ம் ஆண்டில் மூன்றாவது முறையாக கிரிமீலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அந்தவகையில் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருக்கும் வருமான வரம்பை மத்திய அரசு ஏற்று மாநில அரசுகளுடனும், ஓபிசி அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT