சென்னை: கொளத்தூரில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்த மருத்துவமனையை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து, நோயாளிகளிடம் சிகிச்சை மற்றும் உணவு குறித்து கேட்டறிந்தார்.
சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகரில் கடந்த பிப்.27-ம் தேதி, பெரியார் அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும், மருத்துவமனை செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் சிகிச்சை மற்றும் உணவு தொடர்பாக கேட்டறிந்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மருத்துவமனைக்கு அரசு விடுமுறை நாள் கிடையாது. சிறப்பு மருத்துவமனையில் 560 படுக்கைகள் உள்ளன. பழைய கட்டிடத்தில் 300 படுக்கைகள் உள்ளன. புதிய மருத்துவமனையில் 25-க்கும் மேற்பட்ட மருத்துவத் துறைகள் செயல்பட்டு வருகின்றன.
தினசரி 125-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மார்பக பிரச்சினைகளுக்காக வருகின்றனர். மருத்துவமனையை சுற்றிலும் உள்ள இடங்களை சீரமைக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். மருத்துவமனை சுத்தமாக உள்ளது. கார்ப்பரேட் நிறுவனத்தை மிஞ்சும் அளவுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``சட்டப்பேரவையில் நாளை (இன்று) இதுகுறித்து பேச உள்ளேன்'' என்று பதிலளித்தார்.