சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போலி மருந்து உற்பத்தி இல்லை என்று மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, மாவட்டம் தோறும் பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் நடத்தி வருகிறது. மருந்து கடைகள், மருந்து விநியோக நிறுவனங்கள், கிடங்குகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. அங்கிருந்து பெறப்படும் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. உரிய விகிதத்தில் மூலப் பொருள்கள் இல்லாத மருந்துகளும், உரிய தர நிலையில் இல்லாத மருந்துகளும் உட்கொள்ள தகுதியற்றவையாக அறிவிக்கப்படுகிறது. அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநில மருந்து உரிமம் வழங்குதல் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதர் கூறுகையில், “மருந்து விற்பனை மற்றும் உற்பத்தி தரத்தில் முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டதாக கண்டறியவில்லை. கடந்த ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்ட ஒரு போலி மருந்தும், வேறு மாநிலத்தில் தயாரிக்கப்பட்டதாகும். தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டன. அதனை உற்பத்தி செய்த 74 மருந்து நிறுவனங்கள் மீது வழக்கு தொடர மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றார்.