திருப்பத்தூர்: ‘தமிழகத்தில் கூட்டுறவு தேர்தலை நடத்துவதில் திமுகவுக்கு எந்தவித அச்சமும் இல்லை’ என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியைப் படிக்கவில்லை என்றால் யாசகம் எடுக்கக்கூட முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தி படித்தவர்கள், இந்தி தெரிந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்கக் கூடாது என முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு தேர்தல் முறையாக நடைபெறவில்லை. அதனால்தான் போலி உறுப்பினர்களை நீக்கிவிட்டு உண்மையானோரை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தலை கூட்டுறவு தேர்தல் ஆணையம்தான் நடத்த வேண்டும்.
கூட்டுறவு தேர்தலை நடத்துவதில் திமுகவுக்கு எந்தவித அச்சமும் இல்லை. கூட்டுறவுத் துறையில் பணியாளர்கள் தவறு செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைத்தான் அரசு செய்ய முடியும். குற்றங்கள் மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் உரையாடலை மத்திய அரசு ஒட்டுக் கேட்பது தவறு. விஜய் கட்சியால் யாருக்கு பாதிப்பு என்பது 2026 தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.