மணிமங்கலம்: காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் மாநகர காவல் ஆணையராக எல்லையில் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சி, குத்தனூர் பகுதியை சேர்ந்தவர் இரு கால்களையும் இழந்த மாற்றுத் திறனாளி பெண்மணி ஸ்டெல்லா மேரி (40). இவரது கணவர் சுரேஷ் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார்.
சுரேஷுக்கு ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் கிடைக்காததால், குடும்ப செலவுகளை சமாளிக்க, ஸ்டெல்லா மேரி கடந்த 2020-ம் ஆண்டு முதல் கள்ளத்தனமாக சட்டவிரோதமான முறையில் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தார்.
அவர் மீது 6 முறை மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஸ்டெல்லா மேரியை நேரில் சந்தித்த மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன், `இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது' என வலியுறுத்தியதன் பேரில் கடந்த 3 மாதங்களாக திருந்தி வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும் தங்கள் வாழ்வாதாரத்துக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென ஸ்டெல்லா மேரி மணிமங்கலம் போலீஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்டெல்லா மேரியின் கோரிக்கைக்கு இணங்க அவரது கணவருக்கு ரூ.50 ஆயிரம் முன் பணமாக செலுத்தி புதிய ஆட்டோவை மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் வாங்கி கொடுத்துள்ளார்.
சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில் மாற்றுத் திறனாளி பெண்ணின் மறு வாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்த மணிமங்கலம் போலீஸாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.