தமிழகம்

தமிழகத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த முடிவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரக பகுதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கு இணையாக வளர்த்து வருகின்றன. அந்த பகுதிகளுக்கு, நகர்ப்புறங்களுக்கு இணையாக சாலை, குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரிவுபடுத்துவது அவசியமாகிறது.

அதேபோல, அரசின் திட்டங்களை மக்களுக்கு உரிய வகையில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கேற்ப, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன. அதன்படி, தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டன.

இந்த நிலையில், புதிதாக நகராட்சிகள் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி, தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT