தூத்துக்குடி விமான நிலையத்துக்கு 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு தண்ணீரை பீச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 
தமிழகம்

தூத்துக்குடி- சென்னை இடையே கூடுதல் விமான சேவை

செய்திப்பிரிவு

சென்னை-தூத்துக்குடி இடையே நேற்று முதல் கூடுதல் விமானம் இயக்கப்படுகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் விமான சேவையைத் தொடங்கியது.

தூத்துக்குடி விமான நிலையம் வளர்ச்சி பெற்று வருகிறது. பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ என்ற தனியார் விமான நிறுவனம் மூலம் தினமும் 4 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல, பெங்களூருக்கு தினமும் ஒரு விமான சேவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தூத்துக்குடிக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்க முன்வந்தது. இந்நிறுவனம் ஏற்கெனவே கரோனா காலத்தில் நிறுத்திய சேவையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 2 சேவையும், பெங்களூருக்கு ஒரு சேவையும் வழங்கப்பட உள்ளது.

முதல் நாளான நேற்று தூத்துக்குடி-சென்னை இடையே 2 விமானங்கள் இயக்கப்பட்டன. முதல் விமானம் காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பகல் 12.18 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்து சேர்ந்தது. அங்கு தரையிறங்கி ஓடுதளத்தில் வந்தபோது, இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் விமானத்தின் மீது தண்ணீரை பீச்சியடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 40 பயணிகள் வந்தனர். கேக் வெட்டி ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குநர் (பொ) பிரிட்டோ, மேலாளர்கள் அபிஷேக், ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, தூத்துக்குடியில் இருந்து 28 பயணிகளுடன் விமானம் பகல் 12.40 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. முதல் நாளில் பெங்களூரு விமான சேவை நடைபெறவில்லை. இன்று (மார்ச் 31) முதல் அனைத்து விமானங்களும் முறையாக இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT