தமிழகம்

திமுகவை எதிர்க்கும் எந்த கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம்: டிடிவி.தினகரன் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: திமுகவை எதிர்க்கும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.

மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி.தினகரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமமுக ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். ஆனால், அந்த சந்திப்பு குறித்து வெளிப்படையாக பேசவில்லை. திமுகவை எதிர்க்கும், திமுக வெற்றி பெறக் கூடாது என்று கருதும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம்.

திமுகவுக்கு மாற்று தவெக என்று விஜய் கூறியிருப்பது, அவரது விரும்பம் மட்டுமே. தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள் மனதில் இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். சுயநலம், பதவி வெறியாலும், திமுக மீதுள்ள பயத்தாலும், தங்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்பதற்காகவும், திமுக தேர்தலில் வெற்றி பெற சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது திமுகவினர் பழி சுமத்துகின்றனர்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தது குறித்து எதுவும் தெரியாது. ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு துரோகம் செய்தார் என்று கூறும் பழனிசாமிதான் உண்மையில் துரோகத்தின் வடிவம். தனியாக கட்சி நடத்துவதால் நாங்கள் அதிமுகவில் இணைய வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT