தமிழகம்

கிராமசபை கூட்டம் என அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது ஏன்? - அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பாஜக பெண் நிர்வாகி

செய்திப்பிரிவு

விருதுநகர்: கிராமசபை கூட்டம் என்று கூறி அழைத்துவிட்டு, திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது ஏன் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் பெண் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, விருதுநகர் அருகேயுள்ள பாலவநத்தம் கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நிறைவடையும் நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மீனா என்ற பெண் எழுந்து அமைச்சரிடம், "கிராமசபைக் கூட்டம் நடக்கும் இடத்தில் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "மக்களை ஏன் திசை திருப்புகிறீர்கள்? மத்திய அரசு ரூ.36 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளதே? எனது கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்?" என்றார்.

மேலும், "விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. அதற்காக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரை விசாரித்த பின்புதானே சம்பளம் வழங்குவார்கள். அதற்குள் மத்திய அரசை குறை கூறி ஒரு அமைச்சரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாமா?" என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அந்தப் பெண்மை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், தொடர்ந்து கேள்வி கேட்டதால், அமைச்சர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார். பின்னர் திமுகவினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவில்லை.

SCROLL FOR NEXT