தமிழகம்

தமிழக அரசு இருமொழிக் கொள்கையை செம்மைப்படுத்த வேண்டும்: ப.சிதம்பரம்

பெ.ஜேம்ஸ்குமார்

தாம்பரம்: “இருமொழிக் கொள்கையை செம்மைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்.” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (மார்ச் 28) மாலை தாம்பரம் சண்முகம் சாலையில் இரு மொழி கொள்கைக்கு ஆதரவாகவும், இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட தலைவர் ஆர். எஸ் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தி மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடர வேண்டுமென 1950 இல் முடிவு செய்யப்பட்டது .

1963 - 65-ல் இந்தி பேசாத மாநிலத்தில் ஆங்கில மொழி ஆட்சி மொழியாக தொடர வேண்டும் என அப்போதே பேசி முடிக்கப்பட்டது. அது முடிந்த விஷயம். தற்போது ஏன் மும்மொழி கொள்கையை கொண்டு வருகிறார்கள் . 2026-ல் தமிழகத்தில் தேர்தல் வருவதால் தான் கொண்டு வருகிறார்கள் எனத் தோன்றுகிறது. மத்திய அரசு நடத்தும் 52 கேந்திர வித்யாலயாவில் இருமொழிக் கொள்கை உள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில், ஒரு மொழி கொள்கைதான் பயன்பாட்டில் இருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் ஏன் முன்மொழி கொள்கை. இங்கே இருமொழிக் கொள்கையை செம்மைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்,

அடுத்ததாக தொகுதி மறுசீரமைப்பு 1971 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு செய்தபோது அது கொண்டு வரப்பட்டது. அடுத்தடுத்து நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தொகுதி மறு சீரமைப்பு கொண்டு வரவில்லை. தற்போது 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறு சீரமைப்பு கொண்டு வர முனைகிறார்கள். இதனால் தென் மாநிலத்தில் 26 உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும்

இதனால் பாஜக தென் மாநில உறுப்பினர்கள் எண்ணிக்கை தேவைப்படாமலேயே வட மாநிலத்தில் ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

இந்த திட்டங்களை நாம் எதிர்க்கிறோம் திமுக தலைமை உறுதியாக உரத்த குரல் கொடுக்கிறது பாராட்டுகிறோம் பாரதிய ஜனதா கட்சி அதனை ஆதரிக்கிறது. ஆனால், ஒரு சிலர் எதற்கும் உடன்படாமல் ஒரு மணி நேரம் சந்தித்து பேசி விட்டு எதுவும் பேசவில்லை என கூறுகிறார்கள் அவர்களை எப்படி நம்புவது.

நமக்கு இரண்டு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. அதனை அடுத்த 15 மாதங்கள் உன்னிப்பாக கவனித்து செயல்பட வேண்டும் என பேசினார்.

பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை. பீட்டர் அல்போன்ஸ், மாநில பொருளாளர் ரூபி. ஆர். மனோகரன், நகரத் தலைவர்கள் ஜே .பி விஜய ஆனந்த், தீனதயாளன், அப்துல் காதர், பம்மல் பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT