தமிழகம்

வாரன்ட் பிறப்பித்தவரை கைது செய்ய தவறிய ஆய்வாளர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

திமுக பிரமுகரின் உறவினர் கொலையில் தொடர்புடைய நபருக்கு நீதிமன்றம் வாரன்ட் பிறபித்தும், அவரைக் கைது செய்ய தவறிய மதுரை கூடல்புதூர் காவல் ஆய்வாளர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார்.

மதுரை தனக்கன்குளம் அருகேயுள்ள மொட்டமலை பகுதியில் கடந்த 22-ம் தேதி முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் (27) என்பவர் 3 பேர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடினர்.

இந்நிலையில், காளீஸ்வரன் கொலையில் தொடர்புடைய மதுரை சுள்ளான் பாண்டி, மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய இவர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. ஆனால் அவரைக் கைது செய்யாமல் பணியில் அலட்சியமாக இருந்ததாக, மதுரை கூடல்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சுள்ளான்பாண்டி கைது செய்யப்பட்டிருந்தால் காளீஸ்வரன் கொலை நடந்திருக்காது என போலீஸார் கருதினர்.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து, மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் நேற்று உத்தரவிட்டார். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் குற்றவாளிகள் கைது விவரம் குறித்த அறிக்கையிலும், உரிய தகவல் கொடுக்காமல் இருந்ததாகவும் பாலமுருகன் மீது புகார் எழுந்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT