ராமேசுவரம்: ஏப்ரல் 6 அன்று பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவின் போது, ராமேசுவரம் - தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த புதிய ரயிலுக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா 2014ம் ஆண்டு நடைபெற்றது.
கலாம் சூட்டிய பெயர்: பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ரயில்வே அமைச்சகத்துக்கு, ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு புதியதாக ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் ஒரு புதிய தினசரி ரயிலை இயக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலிலும் மீனவர்கள் மீன்களைக் கொண்டு செல்வதற்காக பிரத்யேக ஐஸ் பெட்டி வசதி செய்து தர வேண்டும். பாம்பன் ரயில் பாலத்தை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்நிலையில், ரூ.545 கோடி மதிப்பீட்டில் பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டு, ஏப்ரல் 6 அன்று பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா ராமேசுவரத்தில் நடைபெறுகிறது. திறப்பு விழாவிற்காக மேடை அமைக்கும் பணிகள் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே ஆலயம் வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) துவங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதுடன், .ராமேசுவரம் - தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையை மோடி தொடங்கி வைக்கிறார். இந்த புதிய ரயிலுக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் ராமேசுவரம், மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக தாம்பரம் சென்றடையும். இந்த ரயிலின் அட்டவணை தெற்கு ரயில்வே சார்பாக விரைவில் வெளியிடப்படும். ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் என்று தினசரி ரயில்கள் இயக்கபட்டு வரும் நிலையில், பாம்பன் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ரயிலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.