சென்னை: “கூடுதல் சட்டக் கல்லூரிகளை தொடங்கினால் வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பு பாதிக்கும்” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 28) கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி, “கிருஷ்ணகிரி மாவட்டம் 6 தொகுதிகளை கொண்ட பெரிய மாவட்டம். அங்கு அனைத்து உயர் கல்வி கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. சட்டக் கல்லூரி மட்டும் இல்லை. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு சட்டக் கல்லூரி தொடங்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்து பேசியது: “தமிழகத்தில் 15 அரசு சட்டக் கல்லூரிகள், 12 தனியார் சட்டக்கல்லூரிகள் உள்ளன. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 15 சட்டக்கல்லூரிகளை நடத்தி வருகின்றன. மேலும் அம்பேத்கர் சட்டப்பள்ளி, திருச்சி தேசிய சட்டப்பள்ளி ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு பட்டப் படிப்பை 36,640 பேரும், 5 ஆண்டு படிப்பை 11,910 பேரும் என மொத்தம் 48,550 பேர் பயின்று வருகின்றனர்.
வழக்கறிஞர்களின் எண்ணிக்கைக்கும், நீதிமன்றங்களில் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கைக்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 1.75 லட்சமாக உள்ளது. ஆண்டுதோறும் 9 ஆயிரம் பேர் புதிதாக பதிவு செய்து வருகின்றனர். எனவே கூடுதலாக சட்டக் கல்லூரிகளை தொடங்கி, வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் பட்சத்தில் தொழில் வாய்ப்பில் பாதகம் ஏற்படும். அதனால் புதிதாக சட்டக் கல்லூரிகள் தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தில் இருந்து அரசுக்கு கோப்புகள் வர வேண்டும். நிதிநிலைக்கேற்ப அதற்கான அனுமதியை அரசு வழங்கும். பேரவைத் தலைவர், அவரது தொகுதிக்குட்பட்ட வள்ளியூரில் கூடுதல் நீதின்றம் அமைக்கப்படுமா என கேட்டுள்ளார். இந்த ஆண்டு கொண்டுவருவதற்கான பரிசீலனை, அரசின் கவனத்தில் இருக்கிறது” என்று அவர் பதில் அளித்தார்.