தமிழகம்

பயணிகளே ரீசார்ஜ் செய்யும் வகையிலான ‘சிங்காரச் சென்னை’அட்டை அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: பயணிகளே ரீசார்ஜ் செய்யும் வகையிலான ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிமுகம் செய்தார்.

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டை மூலமாகவும் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி சார்பிலான ‘சிங்கார சென்னை’ பயண அட்டையை தலைமைச் செயலகத்தில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் உள்ளிட்டோர் முன்னிலையில் அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.

மெட்ரோ ரயில், மாநகர பேருந்து ஆகியவற்றில் பயணிக்க உதவும் இந்த அட்டை ரூ.100-க்கு வழங்கப்படுகிறது. இதில் ரூ.50 மதிப்பிலான கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும், இணையவழி சேவை, செல்போன் செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியின் விற்பனை மையங்கள் மூலமாக எளிதாக ரீசார்ஜ் செய்யவும் முடியும்.

அட்டையின் பின்புறம் உள்ள க்யூஆர் குறியீடை ஸ்கேன் செய்து பயணிகளே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். முக்கிய பேருந்து நிலையங்களில் இந்தப் பயண அட்டை விற்பனை செய்யப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT