புதுச்சேரி: லஞ்ச வழக்கில் பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர், செயற்பொறியாளரை சிபிஐ கைது செய்துள்ள நிலையில் துறை அமைச்சர் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட சென்ற முன்னாள் முதல்வர், 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸாரை போலீஸார் கைது செய்தனர். விரைவில் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை சிபிஐ-யிடம் தரவுள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார்.
லஞ்சம் பெற்ற வழக்கில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், மன்னார்குடி தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த இளமுருகன் ஆகிய மூன்று பேரை காரைக்காலில் சிபிஐ கைது செய்தது. பொறியாளர்கள் வீட்டில் இருந்து ரூ.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.தலைமைப் பொறியாளர் கைதாகியுள்ள நிலையில் அவரது டைரி, கைபேசிகளை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில் இதற்கு பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலக வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் தர்ணா போராட்டம் நடத்தியதால் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் சிபிஐ வழக்குக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையெனில் அவரது வீடு முற்றையிடப்படும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (மார்ச் 26) மாலை காந்தி வீதியில் நாராயணசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் வைத்தியநாதன், பரம்பத் மற்றும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூடினர். அவர்கள் அமைச்சர் வீடு நோக்கி சென்றனர். காங்கிரஸ் போராட்டத்தையொட்டி காந்தி வீதி - அரவிந்தர் வீதி சந்திப்பில் போலீஸார் தடுப்புகளை வைத்திருந்தனர். அத்துடன் அமைச்சர் வீடு அமைந்துள்ள பெருமாள் கோயில் வீதியின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் கலவரத்தை அடக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் அமைச்சர் வீடு நோக்கி வந்த காங்கிரஸாரை அரவிந்தர் வீதி அருகே போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காங்கிரஸார் அனைரையும் அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி போலீஸார் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து நாராயணசாமி கூறுகையில், “புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. ரெஸ்டோ பார் அனுமதியில் 40 சதவீதம் கமிஷன் பெறுகின்றனர். பத்திரப்பதிவு துறையிலும், பட்டா மாற்றுவதிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. முட்டை வாங்குவதிலும் ஊழல் நடந்துள்ளது. முட்டை விநியோகிக்கும் ஒப்பந்ததாரர் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளார். மின்துறை, ஆசிரியர் மாற்றம், ரேஷன் கார்டை சிவப்பு அட்டையாக மாற்ற ரூ.15 ஆயிரம் தந்தால் உடனே தருகிறார்கள்.
புதிய மதுபான தொழிற்சாலைகள் அனுமதியில் லஞ்சம் பெறப்பட்டதாக பாஜக எம்.எல்.ஏவே குற்றம் சாட்டியுள்ளனர். அதில் ரூ.60 கோடி கைமாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர். கூட்டணியில் உள்ள பாஜக எம்.எல்.ஏக்களே சட்டப்பேரவையில் இவ்விவகாரத்தில் போராட்டம் நடத்தினர். கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை கமிஷன் போகிறது. நான் கூறிய குற்றச்சாட்டுகள் தற்போதைய சிபிஐ நடவடிக்கையால் உண்மையாகியுள்ளது. பொதுப்பணித்துறையில் உயர் அதிகாரிகள் சிக்கியுள்ளனர். ரங்கசாமி ஆட்சியில் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. இவ்வழக்கில் பொதுப்பணித்துறை லஞ்சப்பணம் யாருக்கு செல்கிறது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.
பாரபட்சமின்றி விசாரணை நடக்கவே அமைச்சர் பதவி விலகக்கோரி போராட்டம் நடத்துகிறோம். ஊழல் ஆட்சிக்கு முடிவுகாலம் நெருங்கி விட்டது. பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்திருந்தால் ஆளும் அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அதுபோல் ஏதும் நடக்கவில்லை. நாங்கள் குற்றம் சாட்டியப்படி சிபிஐ தற்போது பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளரை கைது செய்துள்ளது. அதற்கு பொறுப்பு ஏற்று அமைச்சர் லட்சுமிநாராயணன் ராஜிநாமா செய்யவேண்டும். விரைவில் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை சிபிஐயிடம் தரவுள்ளோம்” என்றார்.