சென்னை: கிராமப்புறங்களில் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்தார். மேலும் மக்கள் நல பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக முதல்வருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அத்துறையின் அமைச்சர் இ.பெரியசாமி பதிலளித்துப் பேசியதாவது: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். கடந்த 4 ஆண்டுகளில் ரூ,1,122 கோடி செலவில் 3,766 அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதேபோதல் முதல்வரின் கிராமச்சாலை திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 10,545 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சாலைகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4,200 கோடி செலவிடப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.450 கோடி ஒ1துக்கீடு செய்யப்பட்டது.
பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் 20 ஆயிரம் வீடுகள் பழுதுபார்க்கப்பட்டு அவை புது வீடுகளாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. குடிநீர் திட்டங்களை பொருத்தவரையில் புதிதாக 4600 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் ஒரு கோடியே 25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.அவர்களில் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு குடிநீர் வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம், மாநில அரசின் பங்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம். தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப மத்திய அரசு தனது பங்களிப்புத்தொகைய உயர்த்தி தர வேண்டும்.
ஊரக பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கும் பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளை அருகே இருக்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைப்பது தொடர்பாக ஆராய ஊரக வளர்ச்சித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு மாவட்ட ஆட்சியர்களின் கருத்துருக்களை பெற்று ஊராட்சிகள் இணைப்பு தொடர்பாக முடிவெடுக்கும். மக்கள் நல பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக முதல்வருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: * கிராமப்புற பகுதி மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் வகையில், பழுதடைந்த நிலையில் உள்ள 500 ஊராட்சி அலுவலகங்களுக்கு ரூ.157 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
* ஊரக பகுதிகளில் 500 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.87 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
* கிராமப்புற மக்கள் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எளிதில் கொண்டுசெல்லும் வகையில் ரூ.61 கோடி செலவில் 500 முழுநேர ரேஷன் கடைகள் கட்டப்படும்.
* புவி வெப்பம் அடைதலை தடுக்கவும் ஊரக பகுதிகளில் பசுமையை அதிகரிக்கவும் தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சாலையோரங்களில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும்.
* ஊரக பகுதிகளில் 500 அரசு பள்ளிகளில் ரூ.50 கோடியில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
* கிராமப்புற பகுதிகளில் இயற்கை மற்றும் நீர்வள ஆதாரத்தை பெருக்கவும், சமுதாய நிலங்களை மேம்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் புதிய குளங்கள் அமைக்கவும், மரக்கன்றுகள் நடவும் ரூ.500 கோடி மதிப்பீட்டில் இயற்கை மற்றும் நீர்வள பணிகள் மேற்கொள்ளப்படும்.
* ஊரக பகுதிகளில் உள்ள மண் சாலைகள் ரூ.150 கோடி செலவில் ஓரடுக்கு கப்பி சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
* ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ரூ.182 கோடி மதிப்பீட்டில் குழந்தை நேய வகுப்பறைகள் கட்டப்படும்.
* ஊரக பகுதிகளில் ரூ.800 கோடி செலவில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும். மேலும், ரூ.300 கோடியில் புதிதாக 1200 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படும்.
* துப்புரவு பணியாளர்களின் நலப்பணிகளுக்காக துப்புரவு தொழிலாளர் நலவாரியத்துக்கு ரூ.5 கோடி வழங்கப்படும்.
* ஊராட்சித்துறை மூலம் கட்டப்பட்டுள்ள பல்வேறு அலுவலகங்கள் மற்றும் பொது பயன்பாட்டு கட்டிடங்களை புனரமைத்து முறையாக பராமரிப்புக்க விரிவான கொள்கை வகுக்கப்படும். 2025-2025-ம் நிதி ஆண்டு முதல் ஒவ்வொர ஆண்டும் இதற்கென மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.
* கிராமப்புறங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடம் இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் 1500 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும். மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.