குமுளி: நீர்மட்டம் 113 அடியாக குறைந்ததைத் தொடர்ந்து முல்லை பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின்ன்அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் நீர்வரத்து இன்றி குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படத் தொடங்கி உள்ளது.
முல்லை பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெரியளவில் மழை இல்லை. இதனால் நீர்வரத்து பல நாட்கள் பூஜ்ய நிலையிலே இருந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு 115.50அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று 113அடியாக (மொத்த உயரம் 152அடி) குறைந்தது.
நீர்வரத்து விநாடிக்கு 127 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 105 கனஅடியாகவும் உள்ளது. அணையைப் பொறுத்தளவில் 104 அடிவரை நீர்மட்டம் இருந்தால்தான் சுரங்கப்பாதை வழியே தமிழகத்துக்கு தண்ணீர் எடுக்க முடியும் . மேலும் சுரங்கப்பாதையில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுவதால் 108 அடி இருந்தால்தான் நீர் பெற முடியும் நிலை உள்ளது. இந்நிலையில் நீர்மட்டம் வெகுவாய் குறைந்து வருவதால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
அணையில்இருந்து வெளியேறும் நீர் லோயர்கேம்ப் முதல் குன்னூர் வரை பல உள்ளாட்சிகளை கடந்து செல்கிறது. இதனால் குடிநீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக முல்லை பெரியாறு இருந்து வருகிறது. தற்போது ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் லோயர்கேம்ப், கூடலூர், கம்பம், புதுப்பட்டி, உத்தமபாளையம், பழநிசெட்டிபட்டி, குன்னூர் உள்ளிட்ட குடிநீர் திட்டங்களுக்கான உறை கிணறுகளில் நீர்சுரப்பு குறைந்துள்ளது.
இதனால் கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கி உள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வெளியேற்றப்படும் நீரின் பெரும்பகுதி மதுரை, லோயர்கேம்ப் குடிநீர் திட்டங்களுக்கு சென்று விடுகிறது. இதனால் ஆற்றில் நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளது. கோடைவெயில், மழையின்மை போன்றவற்றினால் நீர்மட்டமும் வெகுவாய் சரிந்து வருகிறது. ஆகவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் ” என்றனர்.