தமிழகம்

பள்ளிகளில் அறிவுரை குழுமம் முறையாக இயங்குவதை உறுதிப்படுத்தக் கோரி வழக்கு: ஐகோர்ட் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறிவுரை குழுமங்கள் முறையாக இயங்குவதை உறுதிப்படுத்தக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,“தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில அளவில் பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் காவல்துறையினர், சைபர் குற்ற காவலர்கள், தலா 2 கல்வியாளர்கள், உளவியலாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட வேண்டும்.

இக்குழுவின் மேற்பார்வையில் பள்ளி அளவில் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், பெற்றோர்- நிர்வாக பிரதிநிதி, ஆசிரியர் அல்லாத அலுவலர் ஆகியோரை கொண்ட குழு அமைக்க வேண்டும். இந்தக்குழு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் இவ்வாறு அமைக்கப்பட்ட மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக்குழு 2021-22 கல்வி ஆண்டுக்குப் பிறகு மறுக்கட்டமைப்பு செய்யப்படவில்லை.

இந்த குழுவால் நிகழ்வுகளை சரியாக ஒருங்கிணைக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி மாணவர்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்கான உரிய திட்டம் வகுக்கப்படாமல் உள்ளது. தற்போது, சமூக ஊடகங்கள் மற்றும் பிற வகைகளில் பள்ளி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது தொடர்பான ஏராளமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் அறிவுரை குழுமம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என வழிகாட்டுதல்கள் இருப்பினும் அது செயல்படுத்தப்படவில்லை.எனவே, அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமத்தை மாற்றி அமைக்கவும், இந்த குழுமம் முறையாக இயங்கி பள்ளி மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தவும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்து. மனு தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT