சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கருப்பசாமி பாண்டியன் 1977-இல் ஆலங்குளம், 1980-இல் பாளையங்கோட்டை, 2006-இல் தென்காசி தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார்.
நீண்டகாலம் அவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உடனடியாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.