தமிழகம்

அங்க போனா அடுத்த முறை சீட் கிடைக்காது... ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்த ‘சென்டிமென்ட்’ சோதனை!

அ.கோபால கிருஷ்ணன்

மக்கள் பிரதிநிதிகளை மக்கள் எளிதில் சந்தித்து தங்களது குறைகளைச் சொல்லத்தான் அனைத்துத் தொகுதிகளிலும் எம்எல்ஏ அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால், எம்எல்ஏ அலுவலகத்துக்குச் சென்றால் அடுத்த தேர்தலில் சீட் கிடைக்காது; அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனமாகிவிடும் என யாரோ கிளப்பிவிட்ட சென்டிமென்ட் புரளியை நம்பி சுமார் 4 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீவில்​லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்​குளம் தெப்பத்தின் மேற்கு கரையில் எண்ணெய் காப்பு மண்டபம் அருகே எம்எல்ஏ அலுவலகம் 2001 பிப்ரவரி 22-ல் திறக்​கப்​பட்டது. அப்போது ஸ்ரீவில்​லிபுத்தூர் எம்எல்​ஏ-வாக இருந்தவர் அதிமுக-வைச் சேர்ந்த தாமரைக்கனி.

அதிமுக சார்பில் 4 முறையும், சுயேச்​சையாக ஒரு முறையும் ஸ்ரீவில்​லிபுத்​தூரில் வென்றவர் தாமரைக்கனி. புதிதாக திறக்​கப்பட்ட எம்எல்ஏ அலுவல​கத்​துக்குள் முதல் ஆளாக அடியெடுத்து வைத்த தாமரைக்​க​னிக்கு, 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா சீட் கொடுக்​க​வில்லை. மாறாக அவரது மகன் இன்பத்​தமி​ழனுக்கு வாய்ப்​பளித்து அவரை அமைச்​ச​ராகவும் ஆக்கி​னார். மகனை எதிர்த்து சுயேச்​சையாக போட்டி​யிட்ட தாமரைக்கனி மூன்றாமிடத்​துக்கு தள்ளப்​பட்​டார்.

அமைச்சராக எம்எல்ஏ அலுவல​கத்தில் கால்ப​தித்த இன்பத்​தமி​ழனுக்கு 2006 தேர்தலில் சீட் கிடைக்​க​வில்லை. இதேபோல், இந்த அலுவல​கத்தை பயன்படுத்திய எம்எல்​ஏ-க்கள் ராமசாமி (சிபிஐ), பொன்னு​பாண்​டியன் (சிபிஐ), சந்திரபிரபா (அதிமுக) ஆகியோ​ருக்கும் அடுத்து வந்த தேர்தல்​களில் சீட் கிடைக்​க​வில்லை.

இதையடுத்து, ஸ்ரீவில்​லிபுத்தூர் எம்எல்ஏ அலுவல​கத்​துக்குள் யார் அடியெடுத்து வைத்தாலும் அவர்களுக்கு, அடுத்த தேர்தலில் வாய்ப்புக் கிடைக்​காமல் அரசியல் அடையாளத்தை தொலைத்​து​விடு​வார்கள் என்ற சென்டிமென்டை பரப்பி​விட்​டார்கள்.

இதனால், இப்போது இங்கு எம்எல்​ஏ-வாக இருக்கும் அதிமுக-வைச் சேர்ந்த மான்ராஜ், எம்எல்ஏ அலுவலகம் பக்கம் போகவே யோசித்துக் கொண்டு தனது சொந்த அலுவல​கத்தில் அமர்ந்து மக்களைச் சந்தித்து வருவதாகச் சொல்கி​றார்கள். தமிழகம் முழுவதும் எம்எல்ஏ அலுவல​கங்​களில் இ-சேவை மையங்கள் அமைக்கும் திட்டத்தை 2022-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதற்காக, பேரவைச் செயலகத் துறை சார்பாக 234 எம்எல்ஏ அலுவல​கங்​களுக்கும் கணினிகள், மேஜைகள் உள்ளிட்டவை வழங்கப்​பட்டன. ஆனால், ஸ்ரீவில்​லிபுத்தூர் எம்எல்ஏ அலுவல​கத்தில் இதுவரை இ-சேவை மையம் தொடங்​கப்​பட​வில்லை.

சென்டிமென்ட் காரணமாகத்தான் எம்எல்ஏ அலுவல​கத்துப் பக்கம் போகாமல் இருக்​கிறீர்களா என மான்ராஜிடம் கேட்டதற்கு, “எம்எல்ஏ அலுவல​கத்தை எந்த எம்எல்​ஏ-வும் முழுமை​யாகப் பயன்படுத்​துவது இல்லை. எனது தொகுதியின் எம்எல்ஏ அலுவலகம் ஊருக்கு வெளியே இருப்​பதால் மக்கள் அங்கு வந்து போவது சிரமமாக இருக்​கிறது.

அதனால் மாவட்ட நீதிமன்றம் எதிரே பொதுப்​பணித்துறை இடத்தில் புதிதாக எம்எல்ஏ அலுவலகம் கட்டு​வதற்கு கோரிக்கை விடுத்​துள்​ளேன். தற்போது எனது சொந்த அலுவல​கத்தில் தினசரி மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறேன்.

மற்றபடி, எம்எல்ஏ அலுவல​கத்​திற்குச் சென்றால் அடுத்த தேர்தலில் சீட் கிடைக்காது என்று சொல்லப்​படுவது குறித்து எனக்கெதுவும் தெரியாதுங்க” என்றார். எம்எல்ஏ அலுவல​கத்துப் பக்கம் போகாட்​டியும் பரவாயில்ல... தொகுதி பக்கம் போகாம இருந்​து​டாதீங்க எம்எல்ஏ சார்​!

SCROLL FOR NEXT