தமிழகம்

நெல்லை முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

செய்திப்பிரிவு

முன்னாள் எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபி, நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கடந்த 18-ம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூருன்னிஷா என்பவரை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நெல்லையில் பட்டப் பகலில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் வக்பு வாரிய நில ஆக்கிரமிப்புக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் என்றும், தொடர்ச்சியாக சிலரிடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவரே தெரிவித்திருக்கிறார்.

மேலும், படுகொலை சம்பவத்தை காவல் துறையினர் அலட்சியமாக கையாள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், பெரிய அளவில் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, சம்பவம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் தமிழக டிஜிபி, நெல்லை ஆட்சியர் ஆகியோர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT