கோவையில் கனிமவளக் கடத்தல் சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கடத்தலை தடுக்க வட்டாட்சியர் அந்தஸ்திலான தலைவர் தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மதுக்கரை, செட்டிபாளையம், சூலூர், கிணத்துக்கடவு, காரமடை, சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் 150-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து கற்களை வெட்டியெடுத்து கருங்கற்களாகவும், கிரானைட் கற்களாகவும், சிறு சிறு ஜல்லிக் கற்களாகவும், பி.சாண்ட், எம்.சாண்ட் ஆகவும் மாற்றி அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில், இந்த குவாரிகளில் அரசின் விதிகள் மீறப்படுவதாகவும், கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான சிறப்புச் செய்தி, கடந்த 20-ம் தேதி ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் வெளியானது. அதைத்தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தலை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்திலிருந்து கனிமங்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க, வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்களைத் தலைவராகக் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சிறப்புக் குழுவில், காவல் உதவி ஆய்வாளர், இரு காவலர்கள், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் கோபாலபுரம், நடுப்புணி, வடக்குகாடு, வீரப்ப கவுண்டன் புதூர், மீனாட்சிபுரம், செம்மனாம்பதி, கோவிந்தாபுரம், வாளையாறு, வேலந்தாவளம் (வழுக்கல்), வழுக்குப்பாறை, ஆனைகட்டி, மாங்கரை (தடாகம்) ஆகிய மாநில எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வாகனங்களை தணிக்கை செய்து உரிய ஆவணங்களுடன் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணித்து, விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சிறப்புக் குழுவினரின் நடவடிக்கையை கண்காணிக்க சார் ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் மாவட்ட அளவிலான ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மாவட்ட அளவிலான குழுவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தொடர்புடைய வட்டாட்சியர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், சட்ட விரோத கனிமம் எடுத்தல், கடத்தல், சேகரித்தல் தொடர்பாக தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்க 1800-2333-995 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி செய்யப்பட்டு, 24 மணி நேரமும் புகார்கள் பெறும் வகையில் சுழற்சி முறையில் அதற்கான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரப் பெறும் புகார்கள் தொடர்பாக அலுவலர்களுக்கு உடனுக்குடன் தகவல்கள் பகிரப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு்ள்ளது.