தமிழகம்

‘தமிழகத்தில் சுயமாக முடிவு எடுக்கின்றனர்’ - ஸ்டாலினுக்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “தமிழகத்தில் சுயமாக முடிவு எடுக்கின்றனர். இதனால் தொழிற்சாலைகள் வருகின்றன. மாநில அந்தஸ்து பெறாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், புதுவை பின்தங்கியே இருக்கும்.” என்று முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார். தமிழக முதல்வரை பாராட்டிய நிலையில், தொழிலதிபர்களை புதுச்சேரிக்கு அழைத்து வர பாஜக எம்எல்ஏவுக்கு அறிவுறுத்தினார்.

புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: அசோக்பாபு (பாஜக): புதுவை மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்க ஏதுவாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தும் திட்டம் அரசிடம் எந்நிலையில் உள்ளது? கரசூரில் தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தொழில் முனைவோருக்கு எப்போது இடத்தை அரசு பிரித்து வழங்கும்?

முதல்வர் ரங்கசாமி: கரசூரில் மனைகளாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது. ஜூன் மாதம் தொழிற்சாலைகளுக்கு நிலம் பிரித்து கொடுக்கப்படும். முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். யார் வருவார்கள்? என தெரியவில்லை?

அசோக்பாபு: புதிய தொழிற்சாலைகள் அமைக்க தொழிலதிபர்கள் தயாராக உள்ளனர்.

ரங்கசாமி: அப்படியா சொல்கிறீர்கள். தாராளமாக ஒரு பத்து பேரை எப்போது வேண்டுமானாலு அழைத்து வாருங்கள். அவர்களுக்கு உடனடியாக நிலம் ஒதுக்கி தருகிறோம். தொழிற்சாலைகளை தொடங்க சொல்லுங்கள். ஒரு தொழிற்சாலை தொடங்க அனுமதி பெறுவது எவ்வளவு கடினமாக உள்ளது? என எல்லோருக்கும் தெரியும்.

தொழிற்சாலைகள் துவங்க ஒற்றை சாளர முறையை கொண்டுவந்தோம். தொழிற்சாலைகள் தொடங்கிவிட்டு 3 மாதத்தில் அனுமதி பெறலாம் என கூறினோம். அதற்கு பிறகும் எந்த தொழிற்சாலையும் வரவில்லை. இது உண்மையான நிலை. அதேநேரத்தில் அண்டைமாநிலமான தமிழகத்தில் பல சலுகைகளை அளிக்கின்றனர். தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை முதல்வர் கொண்டு வந்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வருகிறார்.

அவர்களால் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடிகிறது. இதன் காரணமாக திண்டிவனத்தில் மருத்துவ தொழில் பூங்கா கொண்டுவந்து பல தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளனர். நமது மாநில எல்லையில் வானுார், இரும்பையில் பல தொழிற்சாலைகளை பார்க்க முடிகிறது. நமது மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு சலுகை வழங்க மத்திய அரசின் அனுமதி கேட்க வேண்டியுள்ளது. மின் இணைப்பு பெறவே தொழிலதிபர்கள் கஷ்டப்படுகின்றனர்.

அசோக்பாபு: பழைய கதையை பற்றி பேசுகிறார்கள். அன்றைய பாரதம் இல்லை.

பேரவைத்தலைவர் செல்வம்: அதிகாரிகள் தடையாக உள்ளனர்.

முதல்வர் ரங்கசாமி: இதற்கு அரசு நிர்வாகம்தான் காரணம். தொழிற்சாலைகளை அனுமதிப்பது தொடர்பாக தலைமை செயலாளர்தான் முடிவெடுக்க வேண்டும். அதற்கு பிறகுதான் அந்த கோப்பு நம்மிடம் வரும். இதனால்தான் மாநில அந்தஸ்து கண்டிப்பாக அவசியம் என கூறுகிறோம். இது எனக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தில் யார் வந்தாலும், தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக கேட்கிறோம். மாநில அந்தஸ்து பெறாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், புதுவை பின்தங்கியே இருக்கும். முதல்வராக இருந்துதான் இதை பேசுகிறேன் என்றார்.

SCROLL FOR NEXT