பெரியமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்கு வீடு வழங்கக் கோரி, தலைமை செயலக நுழைவாயில் அருகே நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர். | படம்: ம.பிரபு | 
தமிழகம்

வீடு வழங்க கோரிக்கை: தலைமை செயலகம் முன்பு மறியல்

செய்திப்பிரிவு

சென்னை: வீடு வழங்கக் கோரி சென்னை பெரியமேடு பகுதி மக்கள் நேற்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னை பெரியமேடு வி.வி.சாலை பகுதியில் பல ஆண்டுகளாக 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதையடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். திட்டமிட்டபடி, பெரியமேடு பகுதி மக்கள் நேற்று காலை தலைமைச் செயலகம் முன் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். சிறிது நேரம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தலைமைச் செயலக பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், அனைவரையும் காவல் வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT