தமிழகம்

காவிரியில் எந்த கொம்பனாலும் அணை கட்டிவிட முடியாது: அமைச்சர் துரைமுருகன் உறுதி

செய்திப்பிரிவு

தமிழக அரசின் அனுமதி இன்றி காவிரியின் குறுக்கே எந்த கொம்பனாலும் அணை கட்ட முடியாது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது கூறியதாவது:

நதி நீர் பிரச்சினை தொடர்பாக நமது அண்டை மாநிலங்களுடன் உள்ள நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு பேசி பேசி பார்த்தோம். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம். காவிரி பிரச்சினை தொடர்பாக 9 வழக்குகள், முல்லை பெரியாறு தொடர்பாக 9 வழக்குகள் உட்பட உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 22 வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளுக்கு எத்தனை கோடி செலவாகி இருக்கும் என்பது அதிமுக உறுப்பினர்களுக்கும் தெரியும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டிவிடுவார்கள் என்று பேசுகிறார்கள். மேகேதாட்டு அணையை கட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல. முதலில் கர்நாடகம் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரித்து அதற்கு மத்திய நீர்வள ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு மத்திய மின்சார ஆணையத்திடம் அனுமதி பெற்றாக வேண்டும்.

அதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும். பின்னர் மத்திய நீர்த்தேக்க ஆணையத்திடமும் அதன்பிறகு காவிரி நடுவர் மன்றத்திடமும் அனுமதி பெற வேண்டும். இறுதியாக தமிழக அரசின் ஒப்புதலை பெற்றாக வேண்டும். இத்தனை நடைமுறைகள் உள்ளன. எனவே, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த கொம்பனாலும் அணையை கட்ட முடியாது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

SCROLL FOR NEXT