அண்டை மாநிலங்களின் முதல்வர்களுடன் இருக்கும் நட்பைப் பயன்படுத்தி தமிழக பிரச்சினைகளுக்கு முதல்வர் தீர்வு காணலாமே? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி யோசனை தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதம் வருமாறு:
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. தற்போது பழம் நழுவி பாலில் விழுந்தது போன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. அண்டை மாநிலங்களின் முதல்வர்களுடன் தமிழக முதல்வர் நெருக்கமாக உள்ளார். அந்த நட்பைப் பயன்படுத்தி தமிழக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.
பேரவைத் தலைவர் அப்பாவு: நீங்கள் எந்த விஷயத்தை பேச வருகிறீர்கள் என்பது தெரிகிறது. மானியக் கோரிக்கை மீது பேசுங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: தமிழக முதல்வர், அண்டை மாநிலங்களின் முதல்வர்களுடன் நல்ல நட்போடு இருக்கிறார். அந்த நட்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்றுதான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் சொல்கிறார்.
பேரவைத் தலைவர்: நமது மக்கள் எல்லா மாநிலங்களிலும் வசிக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்: அண்டை மாநிலங்களின் முதல்வர்களுடன் நமது முதல்வர் நெருக்கமாக இருக்கிறார். அந்த நெருக்கத்தை பயன்படுத்தி அண்டை மாநிலங்களுடன் நமக்கு இருக்கும் வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரலாம்.
அமைச்சர் துரைமுருகன்: அண்டை மாநிலங்களின் முதல்வர்களுடன் நமது முதல்வர் நட்பாகத்தான் இருக்கிறார். நீங்கள் முதல்வராக இருந்தபோது அண்டை மாநில முதல்வர்களுடன் சண்டையா போட்டுக் கொண்டிருந்தீர்கள்? அப்போது ஏன் தமிழக பிரச்சினைகளை தீர்க்கவில்லை?
எதிர்க்கட்சித் தலைவர்: அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்தக் கருத்தை சொல்லவில்லை. நல்ல எண்ணத்தில்தான் சொல்கிறேன். நான் முதல்வராக இருந்தபோது முல்லை பெரியாறு பிரச்சினை தொடர்பாக கேரளாவுக்குச் சென்று முதல்வரைச் சந்தித்து பேசியிருக்கிறேன். தற்போது உள்ள வாய்ப்பு நல்ல வாய்ப்பு. அதனால்தான் சொல்கிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.