தமிழகம்

அதிகரிக்கும் லஞ்ச புகார்கள்: புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத் துறையைத் தவிர்த்து சிபிஐக்கு புகார்கள் குவிவது ஏன்?

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் லஞ்ச புகார்கள் அதிகரித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தருவதைத் தவிர்த்து சிபிஐக்கு அதிகளவில் புகார்கள் தரப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரியில் லஞ்ச புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. ஆனால் பலரும் இங்கு புகார் தருவது இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடுகளும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. இதனால் பலரும் சென்னை சிபிஐ கிளையில் புகார் தந்து தொடர்ந்து நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் புதுச்சேரி சுற்றுச்சூழல் துறையில் தனியார் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்க லஞ்சம் பெறுவதாக சிபிஐக்கு புகார்கள் சென்றனர்.

இதையடுத்து சென்னை சிபிஐ தரப்பு புதுச்சேரியில் அண்ணாநகர் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறையில் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.

அங்கு முதுநிலை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றும் சீனிவாசராவ் (59), புரோக்கர் ரமேஷ் கண்ணன் (52) இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2.50 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைபோல் புதுச்சேரியில் மேலும் சில துறைகளில் பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாகவும் சிபிஐக்கு புகார் சென்றுள்ளன. அரசு அலுவலகங்களான மின்துறை, பொதுப்பணித்துறை போக்குவரத்து, நகர அமைப்பு குழுமம், சிவில் சப்ளை, தாலுக்கா அலுவலகங்கள், பத்திர பதிவுத்துறை உள்ளிட்ட முக்கிய அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்களுடன் தொடர்புடைய துறைகளில்வந்த புகார்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை நடந்துள்ளது.

வில்லியனூர் கொம்யூன் அலுவலகத்திலும் வழக்குப்பதிவு செய்தது. தற்போது முதல் முறையாக பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் தீனதயாளனை கைது செய்துள்ளது. அவர் வீட்டில் இருந்து ரூ. 65 லட்சம் பறிமுதலாகியுள்ளது. மேலும் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் வீட்டில் இருந்து ரூ. 8 லட்சமும் பறிமுதலாகியுள்ளது. ஒப்பந்த நிறுவன சிதம்பரநாதனும் கைதாகி லஞ்சபணம் ரூ. 2 லட்சமும் சேர்த்து ரூ. 75 லட்சத்தை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.

புதுச்சேரியிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையைப் பலரும் தவிர்த்து சிபிஐயில் புகார் தர காரணம் தொடர்பாக சமூக அமைப்பினரிடம் விசாரித்தபோது, "புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு சம்பந்தமாகப் பெறப்பட்ட புகார் மனுக்கள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 15க்குள்தான் உள்ளன.

போலிச் சான்றிதழ் அளித்துப் பணியில் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை விசாரணை முழுமை அடையவில்லை.பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டவில்லை.

இதனால் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையின் மீது நம்பகத்தன்மையை இழந்து இவர்களிடம் புகார் தர விருப்பம் இல்லாமல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தையும், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தையும் நாடுகின்றனர்.

அத்துடன் பொதுமக்கள் பங்களிப்புடன் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் புதுச்சேரியில் நடத்தப்படாமல் 13 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஊழல்கள் களையப்பட்டு 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் அரசுக்கு கூடுதல் நிதி வருவாய் கிடைத்தது. நிதி கசிவு தடுக்கப்பட்டது. அரசின் அனைத்து துறைகளிலும் வெளிப்படை தன்மை ஏற்பட்டது. அதையும் அரசு அதிகாரிகள் இக்கூட்டங்களை நடத்தாமல் முடக்கிவிட்டதும் நம்பிக்கை இழப்புக்கு ஓர் காரணம்"" என்றனர்.

SCROLL FOR NEXT