தமிழகம்

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல் - ஆவணங்கள் பறிமுதல்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: லஞ்ச விவகாரம் தொடர்பாக புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரின் அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ, ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. மேலும், தலைமைப்பொறியாளர் அறை சீல் வைக்கப்பட்டது.

புதுவை பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக இருப்பவர் தீனதயாளன். இவர் கடந்த 2024 மார்ச்சில் பொறுப்பேற்றார். இவர் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைக்க காரைக்காலுக்குச் சென்றார். அங்கு காரைக்கால் கடற்கரையில் உள்ள அரசு சீகல்ஸ் ஓட்டலில் தங்கி இருந்தார். அங்கு அவரை காரைக்கால் பொதுபணித்துறை அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். அரசு ஒப்பந்ததாரர்கள் சிலரும் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களை அங்கு விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்த விசாரணை நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி இன்று வரை நீடித்தது. விசாரணையில் ஆவணங்களும், லட்சக்கணக்கில் பணமும் சிக்கியதாக தெரிகிறது. இதற்கிடையே சிபிஐ பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமையிலான பிரிவினர் புதுச்சேரிக்கு வந்தனர். அவர்கள் புதுச்சேரி லால்பகதூர் சாஸ்திரி வீதியில் உள்ள மாநில பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் தீனதயாளன் அறையில் சோதனையிட்டனர்.

அதையடுத்து அறையைப் பூட்டி சீலிட்டனர். சீலிடப்பட்ட பூட்டுக்கு மேலே சீலிட்ட விவரமும் சிபிஐ பிரிவினரால் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. அதில் கதவைத் திறக்கக் கூடாது என்ற வாசகத்துடன், சீலிடப்பட்டது என்றும் சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் ஜெயசீலன் பெயர், பதவி விவரங்கள், அவரது கைபேசி எண் ஆகியவையும், அதற்கு கீழ் முதன்மை அதிகாரி மோகன் என குறிப்பிட்ட அதிகாரியின் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளன.

புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் உள்ள தலைமை பொறியாளர் வீட்டிலும் சிபிஐ தரப்பில் சோதனையிடப்பட்டது. மேலும், அவரது மனைவி, மகளிடம் விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT