ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முயல் வேட்டைக்குச் சென்ற இளைஞர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்(33). திருமணமாகவில்லை. கொத்தனார் வேலை செய்து வந்தார். முருகன் தனது நண்பர் மாடமுத்து (32) என்பவருடன் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ரெங்கர் கோயில் செல்லும் வழியில் மேலதொட்டியபட்டி பகுதியில் உள்ள விவசாய காட்டிற்கு நேற்று இரவு முயல் வேட்டைக்கு சென்றார்.
அதிகாலை 1.30 மணி அளவில் பருத்திக் காட்டில் அமைக்கப்பட்டு இருந்த மின் வேலியை மிதித்த முருகன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார், சட்டவிரோதமாக வேலி அமைத்த பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன்(65) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.