தமிழகம்

ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாக 1,000 கோயில்கள் சேர்ப்பு: ரூ.110 கோடி வைப்பு நிதியையும் முதல்வர் வழங்கினார்

செய்திப்பிரிவு

ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாக 1000 கோயில்கள் சேர்க்கப்பட்டு, வைப்பு நிதியாக ரூ.110 கோடிக்கான காசோலை மற்றும் கோயில்களுக்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2021–22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், “12,959 கோயில்களுக்கு ஒருகால பூஜை திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிலைநிதி ஏற்படுத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 12,959 கோயில்களுக்கு ஏற்கெனவே ஒவ்வொரு கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் வைப்பு நிதி, ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதற்கான அரசு மானியமாக ரூ.130 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது.

மேலும், 2022-23-ம் நிதியாண்டில் கூடுதலாக 2 ஆயிரம் கோயில்களுக்கு ஒருகால பூஜை திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசு மானியமாக ரூ.40 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிலையில், 2024-25-ம் நிதியாண்டுக்கான அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், “ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் பயன்பெறும் 17 ஆயிரம் கோயில்களுக்கு வைப்புத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாண்டு 1,000 நிதி வசதியற்ற திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.110 கோடி அரசு நிதியாக வழங்கப்படும்’’ என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள 17 ஆயிரம் கோயில்களுக்கு உயர்த்தப்பட்ட வைப்பு நிதிக்காக ரூ.85 கோடி, கூடுதலாக சேர்க்கப்பட்ட 1,000 கோயில்களுக்கு வைப்பு நிதியாக ரூ.25 கோடி என ரூ.110 கோடிக்கான காசோலையை, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் வகையில், அதன் தலைமை நிதி அலுவலரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், விரிவுபடுத்தப்பட்ட ஒருகால பூஜை திட்ட கோயில்களுக்கு அதற்கான ஆணைகளை அர்ச்சகர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், துறையின் செயலர் க.மணிவாசன், ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT