தமிழகம்

தமிழகத்தில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பேராவூரணி எம்எல்ஏ. என்.அசோக்குமார் பேசும்போது, “சேதுபாவா சமுத்திரம் ஒன்றியம், கொளக்குடி ஊராட்சியில் உள்ள முழுநேர நியாயவிலைக் கடைக்கு கட்டிடம் கட்டப்படுமா?" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளிக்கும்போது, “தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் மொத்தம் 34,908 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 6,611 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்குகின்றன. 2,545 கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள கடைகளுக்கும் விரைவில் சொந்தக் கட்டிடம் கட்டப்படும். 2,500 கடைகளை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற ரேஷன் கடையில் 800 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருந்தால் அந்த கடை பிரிக்கப்படும். கிராமங்களில் உள்ள கடையாக இருந்தால் 500 குடும்ப அட்டைகளுக்கு மேலாகவும், மலைப்பகுதியாக இருந்தால் 400 குடும்ப அட்டைகளுக்கு மேலாகவும் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

97,535 புகார்கள்: பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செ.ராஜேஷ்குமார் பேசும்போது, “தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்படுமா?" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளிக்கையில், “தமிழகத்தில் 2 கோடியே 22 லட்சத்து 59,224 குடும்ப அட்டைகள் உள்ளன. 18 லட்சத்து 9 ஆயிரத்து 677 புதிய ரேஷன் காடுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில் 51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. 37,299 முழுநேர, பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. புகார் இருந்தால் ‘1967’ என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

மேலும், ரேஷன் கடைகளில் உணவுத் துறை அமைச்சர், உணவுத் துறை செயலர், ஆணையர் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் தகவல் பலகையில் இடம்பெற்றுள்ளன. குடும்ப அட்டை தொடர்பான புகார் தெரிவிப்பதற்காக மாதந்தோறும் சனிக்கிழமைகளில் குறைதீர் முகாம்களும் நடத்தப்படுகின்றன.

ரேஷன் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பது, சேவை குறைபாடு, தரம் குறைவு என்பன உள்பட 97,535 புகார்கள் வந்துள்ளன. அவற்றை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT