கோவை: கோவையைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் நாகப்பாம்பு கடித்ததில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவையை அடுத்த வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (39). இவர் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் பாம்புகளைப் பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் விடும் பணியை செய்து வந்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் புகுந்த கொடிய விஷமுள்ள ராஜநாகம் மற்றும் நாகம் உள்ளிட்ட ஏராளமான பாம்புகளை மீட்டு, வனப்பகுதியில் விடுவித் துள்ளார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி தொண்டாமுத்தூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நாகப்பாம்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திற்குச் சென்று நாகப்பாம்பைப் பிடிக்கும் பணியில் ஈடுபட் டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு அவரை கடித்தது. இதை யடுத்து அவர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, “பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குமாருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி குழந்தை என்பதால் அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும்” என்றனர்.