ஜனவரி தொடங்கி மார்ச் மாதத்துக்குள் 3 முறை கனமழை பெய்ததால், வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 3 முறை கனமழை பெய்துள்ளதால், உப்பளங்களில் மழைநீர் தேங்கி, உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் உப்பு உற்பத்தியாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக இந்த 3 மாதங்களில் ஒன்றை லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். ஆனால், அடிக்கடி குறுக்கிட்ட மழை காரணமாக இன்னும் 10 ஆயிரம் டன் உப்புகூட உற்பத்தி செய்ய முடியவில்லை என்று உப்பள உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். உப்பு உற்பத்தி குறைவு காரணமாக விலையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.1,500-க்கு விற்பனையான ஒரு டன் உப்பு, தற்போது ரூ.4 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது.
விலை உயர்ந்தாலும், விற்பனை செய்ய உப்பு இல்லாததால் உற்பத்தியாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தற்போது உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் மழை பெய்தால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் 6 லட்சம் டன் இலக்கை எட்ட முடியாமல் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.