சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய நபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் மலட்டாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மலட்டாறு கரையோரமாக உள்ள திருவெண்ணைய்நல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. அதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக முன்னாள் எம்பி-யுமான கவுதம சிகாமணி, மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.
அப்போது இருவேல்பட்டு கிராமத்தில் சிலர் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது சேற்றை வாரி வீசி, பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாசமாக திட்டியதாக அமைச்சரின் தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு எஸ்.ஐ. அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் அமைச்சர் மீது சேற்றை வாரி வீசியதாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரான விஜயராணி மற்றும் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராமகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சுனில்குமார் ராஜேந்திரன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, ராமகிருஷ்ணனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.