உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையில் திமுக கொடிக் கம்பத்தை அகற்றிய அக்கட்சி நிர்வாகிகள் 
தமிழகம்

உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி: மதுரையில் கொடிக் கம்பங்களை அகற்றிய திமுகவினர்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, மதுரையில் 50 ஆண்டுக்கு முந்தைய 60 அடி உயர திமுக கொடிக் கம்பத்தை, திமுக கட்சி நிர்வாகிகள் அகற்றி கட்சித் தலைமையின் உத்தரவை நிறைவேற்றினர். ஆனால், கொடிக்கம்பத்தை அகற்றும்போது, திமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளிடையே கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை, பொதுஇடங்களில் யார் கட்சி, யார் அமைப்பு கொடி உயரமானது என்ற கவுரவப் பிரச்சனையில் கொடிக்கம்பங்கள் நடுவதில் பல்வேறு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டது.

மதுரையில் கடந்த ஆண்டு இரண்டு இடங்களில் கொடிக் கம்பங்களை நடுவது தொடர்பாக, கூட்டணிக் கட்சிகளாகன திமுக-விசிக இடையே மோதல் ஏற்பட்டு, கடைசியில் மறியல், போராட்டம், கொடிக்கம்பம் நடுவதற்கு ஒத்துழைத்ததாக அரசு ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு காவல்துறையில் வழக்குப்பதிவானது. இதபோல், தமிழகத்தில் கட்சிக் கொடிக்கம்பம் ஏற்றுவது தொடர்பாக மட்டுமே காவல்துறையில் 114 வழக்குகள் பதிவாகியுள்ளதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து, பொதுஇடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை, மற்ற கட்சிகள் யாரும் அமல்படுத்த முன்வராத நிலையில் ஆளும்கட்சியான திமுக , “மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் தத்தம் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்கள், பொது இடங்களில் வைத்துள்ள திமுக கொடிக்கம்பங்களை மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்,” என்று கூறியிருந்தது.

இதையடுத்து, மதுரை மாநகரம் 58-வது வார்டில் 50 ஆண்டுக்கு முந்தைய மேலபொன்னகரம் மெயின் ரோட்டில் இருந்த 60 அடி உயர திமுக கொடிக்கம்பத்தை தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் குழு தலைவருமான மா.ஜெயராமன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அகற்றினர். கொடிக்கம்பத்தை அகற்றும்போது, திமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் கண்கலங்கினர். அவர்களை நிர்வாகிகள் ஆறுதல்படுத்தினர் இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மா.ஜெயராமன் கூறுகையில், “உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற எந்த அரசியல் கட்சிகளும் முன்ரவில்லை. ஆனால், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளிடம் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். அவர் கூறியபடி புறம்போக்கு இடத்தில் உள்ள கொடிக் கம்பங்களை இன்று தொண்டர்களுடன் இணைந்து எங்கள் வார்டில் அகற்ற ஆரம்பித்துள்ளோம். திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என்ற நோக்கத்திலே இப்படி சிந்தித்துள்ளார்.

அவரது நோக்கத்துக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம். மூத்த முன்னோடிகள் திராவிட படிப்பகம் என்ற அடிப்படையில் இந்த கொடிக் கம்பத்தை 50 ஆண்டுக்கு முன்பாக வைத்திருந்தனர். அவர்கள் சிறிய கொடிக்கம்பமாக வைத்திருந்தனர். நாங்கள் கட்சி நிர்வாகிகளாக தலையெடுத்தப் பிறகு 93-ம் ஆண்டில் பெரிய கொடிக்கம்பம் நட்டு, எங்கள் கட்சித் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தற்போது உதயநிதி பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா போன்ற இயக்க நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம்.

நாங்கள் ஆயிரக்கணக்கான கொடிகளை இப்போது ஏற்றிகிறோம். ஆனால், எங்கள் முன்னோடிகள் பெரும் பாடுப்பட்டு இந்த இடத்தில் நட்ட பழமையான இந்த கொடிக்கம்பத்தை அகற்றுவது மிகுந்த வருத்தமாக உள்ளது. ஏனென்றால், திமுக தொண்டர்கள் கட்சி கொடியை தூக்கிப் பிடிப்பதும், கொடிக்கம்பத்தில் ஏற்றுவதையும்தான் வழக்கமாக கொண்டிருந்தோம். ஆனால், கட்சிக்கொடியை இறக்குவது தற்போதுதான் முதல் முதலாக நடந்துள்ளது.” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT