புதுச்சேரி: “சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறீர்கள்” என பாஜக அமைச்சர் மீது சுயேட்சை எம்எல்ஏ புதுச்சேரி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கர், “அரசு பழங்குடியினர் துணைத் திட்டத்தை உருவாக்கி மனைப்பட்டா தருவது, வீடு கட்டி தருவது போன்ற நலத்திட்டங்களை அமலாக்கி மத்திய அரசிடம் நிதி பெறும் நடவடிக்கையை தொடங்குமா?” என்று கேட்டார். அதற்கு அமைச்சர் சாய் சரவணன் குமார், “ஏற்கெனவே திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 2000 மனைப்பட்டா ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தரவுள்ளோம்” என்றார்.
அப்போது சுயேட்சை எம்எல்ஏ சிவா, "துறை ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும். துறையின் மூலமாக ஆர்ஜிதம் செய்து தரவேண்டும்" என்றார். அதற்கு அமைச்சர் சாய் சரவணன் குமார், "தொகுதி எம்எல்ஏ இடம் உள்ளதாக நீங்கள்தான் பரிந்துரைக்க வேண்டும். சட்டமன்றத்தில் மட்டும் பேசக் கூடாது. களத்திலும் பணியாற்ற வேண்டும்" என்றார்.
இதையடுத்து எம்எல்ஏ சிவா, “காரைக்காலில் இத்துறையில் நிரந்தரமாக உதவி இயக்குநர் போடுங்கள். அதுவே செய்யவில்லை. அமைச்சரும் வேலை செய்ய வேண்டும். அவர் இதுவரை வேலை செய்யவில்லை. பெரிதாக பேசுகிறீர்கள். அமைச்சர் சட்டத்துக்கு புறம்பாகத்தான் வேலை செய்கிறீர்கள். நேரடியாக புகார் சொல்கிறேன். குடிமைப்பொருள் துறையிலும் தற்போதும் சட்டத்துக்கு புறம்பாக செய்கிறார்” என்றார்.
அதற்கு அமைச்சர், "ஒரு நாளும் சட்டத்துக்கு புறம்பாக செய்யவில்லை. அதை விளக்குங்கள்" என்றார். இதையடுத்து எம்எல்ஏ சிவா, "வேண்டாம். அது ரொம்ப அதிகம்" என்றார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “அமைச்சர் அவசரப்படக் கூடாது. பதற்றமாக இருக்காதீர்கள். 2000 பேருக்கு மனைப்பட்டா எப்படி தர முடியும்?" என்றார். அதற்கு அமைச்சர், “நாங்கள் தருவோம்” என்றார்.
அமைச்சர் நமச்சிவாயம், "ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள மனைப்பட்டா தருவதற்கான நடவடிக்கை விவரங்களைதான் தருகிறார். புதிதாக மனைப்பட்டா பற்றி சொல்லவில்லை. அதற்கு இடம் கையகப்படுத்த நிதி தேவை. நிலம் விவரங்களை எம்எல்ஏக்கள் தெரிவிக்கலாம்” என்றார். எம்எல்ஏ சிவா, “காரைக்காலை மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் பார்க்கிறீர்கள். பல அதிகாரிகள் இங்கே இல்லை. பல பணியிடம் காலியாகவுள்ளது” என்றார்.