சென்னை: முருகன் கோயிலில் நடைபெறும் தேர் இழுக்கும் திருவிழாவுக்கு குறிப்பிட்ட ‘சபா’ மட்டும் உரிமை கோர முடியாது என தெளிவுபடுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து தரப்பினரும் சேர்ந்து விழாவை நடத்த உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், போரூர் பங்குனி உத்திர பால்காவடி வேல் பூஜை சபா சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவில், “போரூரில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 48-வது ஆண்டாக வரும் ஏப்.10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவின் போது ‘சபா’ சார்பில் தேர் இழுக்கும் திருவிழா நடத்தவும், முன்னுரிமை அளிக்கவும் அனுமதி கோரி அறநிலையத் துறைக்கு மனு அளிக்கப்பட்டது.
ஆனால், குறிப்பிட்ட சபாவுக்கு மட்டும் தேர் இழுக்க அனுமதி வழங்கி முன்னுரிமை அளிக்க முடியாது எனக் கூறி அனுமதியளிக்க மறுத்து விட்டது. எனவே எங்களது ‘சபா’ சார்பில் தேர்த் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், “அந்தக் கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் அறநிலையத் துறை தனி அதிகாரி மூலமாக விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குறிப்பிட்ட ‘சபா’ சார்பில் தேர் இழுக்க அனுமதி வழங்க முடியாது,” என்றார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “முருகன் கோயிலில் வழிபாடு நடத்தவும், முன்னுரிமை கோரவும் குறிப்பிட்ட ‘சபா’வுக்கு மட்டும் தனி உரிமை கிடையாது. சாதிய பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று தேர் திருவிழாவை நடத்தலாம். அதில் மனுதாரர் தரப்பும் கலந்து கொள்ளலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.