மதுரை: ஆன்லைன் பட்டா விண்ணப்பங்களை மனு செய்தவர்களிடம் விசாரிக்காமல் நிராகரிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அரசியார்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி. இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘அரசியார்பட்டியில் உள்ள என் சொத்துக்கு பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை நிராகரித்து ராஜபாளையம் வட்டாட்சியர் 2025 மார்ச் 5-ல் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பு வருவாய் அதிகாரிகள் என்னை விசாரிக்கவில்லை. ஆவணங்களை கேட்கவில்லை. எனவே வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார். அரசு தரப்பில், ‘பட்டா கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பத்தின் முடிவு ஆன்லைன் வழியாகவே தெரிவிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்ப முறை இப்படித்தான் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் வருவாய் அதிகாரிகளை நேரில் சந்திக்கும் போது விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். அதன் பிறகு அந்த உத்தரவு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஏற்கெனவே உயர் நீதிமன்றம் ராணி என்பவர் தொடர்ந்த வழக்கில், பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்காமல், ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரரை விசாரிக்காமல் அவரது ஆன்லைன் பட்டா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதனால் மனுதாரரின் மனு மீண்டும் வட்டாட்சியருக்கு அனுப்பப்படுகிறது. வட்டாட்சியர் மனுதாரரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களை பரிசீலித்து 8 வாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் எதிர்காலங்களில் பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வருவாய் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட வேண்டும். இதற்காக இந்த உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.