திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, டவுன் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி (60) திருநெல்வேலியில் நேற்று கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நிலப்பிரச்சினை தொடர்பாக இந்த கொலை சம்பவத்தில் போலீஸாரால் தேடப்பட்டுவந்த இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். முக்கிய நபர் ஒருவரை துப்பாக்கிச் சூடு நடத்தி போலீஸ் கைது செய்துள்ளது. | வாசிக்க > ஜாகிர் உசேன் கொலையில் தொடர்புடைய நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்த நெல்லை போலீஸ்!
இதனிடையே, சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, துணை ஆணையர் கீதா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஜாகிர் உசேன் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்த ஜாகிர் உசேன் உடலை அவரது மகன் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். மாலையில் ஜனாஸா சிறப்பு தொழுகை்குப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதனிடையே, திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி டவுன் சரக முன்னாள் காவல் உதவி ஆணையரும், தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையருமான செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.