பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

கோடநாடு கொலை வழக்கு விசாரணை ஏப்ரல் 25-க்கு ஒத்திவைப்பு

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: கோடநாடு எஸ்டேட் எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி காவலாளியை கொலை செய்த ஒரு கும்பல் பவகளாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது.

இது தொடர்பாக முக்கிய குற்றவாளி சயான் உட்பட பத்து பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜித்தின் ஜாய் நேரில் ஆஜராகினார்.

மேலும், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி., ஏடிஎஸ்பி., முருகவேல் தலைமையில் போலீஸார் ஆஜராகினர். தற்போது சாட்சிகளிடம் விசாரித்து வருவது குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், “கோடநாடு கொலை, கொள்ளை விசாரணை குறித்து விசாரணையின் நிலை குறித்து நீதிபதி கேட்டறிந்தார். வழக்கு நடந்து வருவது குறித்து நீதிபதியிடம் தெரிவித்தோம். 245 பேரிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து தெரிவித்தோம். மேலும் இன்டர்போல் போலீஸாரிடம் தகவல் கேட்டுள்ளது குறித்து தெரிவித்தோம்.” என்றார்.

SCROLL FOR NEXT