தமிழக பட்ஜெட் தொடர்பான தகவல்கள் 2.15 கோடி எண்களுக்கு பகிரப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசுத் துறைகளும் தங்களது செயலிகளின் மூலமாக பொதுமக்களுக்கு குறைந்த செலவில் வாட்ஸ்அப் சேவைகளை வழங்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவிபுரிந்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் 26 அரசுத் துறைகள் இதுவரை இணைக்கப்பட்டு, தடையற்ற தகவல் தொடர்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பொதுமக்களுக்கு 1.87 கோடி செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு 22.79 லட்சம் செல்போன் எண்களுக்கு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான காணொளி செய்திகள் 1.59 கோடி எண்களுக்கும், பட்ஜெட் பரப்புரை தகவல்கள் 2.15 கோடி எண்களுக்கும், திறன் போட்டி குறித்த தகவல்கள் 6.88 லட்சம் செல்போன் எண்களுக்கும், முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த செய்திகள் 45.75 லட்சம் எண்களுக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளை கவுரவிக்கும் நிகழ்வு 57.37 லட்சம் எண்களுக்கும் பகிரப்பட்டுள்ளன.
துறை ரீதியாக சென்னை மாநகராட்சி மூலம் 2.87 கோடி மக்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் 1.32 கோடி பேருக்கும், கல்வித்துறை மூலம் 2.79 கோடி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கும், குடிநீர் வாரியம் மூலம் 1.18 கோடி வரி செலுத்துவோருக்கும் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் வாட்ஸ்அப் சேவையானது கோடிக்கணக்கான மக்களுக்கு சரியான நேரத்தில் பயனுள்ள தகவல்களை வழங்குவதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.