கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. படம்: ஜெ.மனோகரன். 
தமிழகம்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பிய பின்... - உடல்நிலை தகவல்களை விவரித்த மயில்சாமி அண்ணாதுரை

ஆர்.ஆதித்தன்

கோவை: சுனிதா வில்லியம்ஸ் நடைமுறை வாழ்க்கைக்கு பழக்கமாக சில நாட்களாகும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்லியில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோது விமான பயணம் மேற்கொள்வது சவாலானதாக இருந்தது. தற்போது விமான பயணம் எளிதாகி விட்டது. இப்போது விண்வெளி பயணமும் அப்படிதான். விமான பயணம் போலதான் விண்வெளி பயணம் மாறியுள்ளது.

மனிதனை விண்வெளிக்கு எடுத்து செல்வதில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. விண்வெளி பயணங்கள் ஓராண்டுக்கு முன்பு திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. விண்வெளி நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு விண்கலம் செல்ல வேண்டும்.

சுனிதா வில்லியம்ஸ் சென்ற போயிங் விண்கலம் சிக்கல் ஏற்பட்டதால் ஆள் இல்லாமல் திரும்பி வந்தது. சுனிதா வில்லியம்ஸ் ஏற்கெனவே அதிக நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கி உள்ளார். விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவர். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார் சுனிதா வில்லியம்ஸ். சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவை சேர்ந்தவர். தற்போது ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரரிடம் பொறுப்பை ஒப்படைத்து வந்திருக்கிறார்.

சர்வதேச விண்வெளி மையம் என்பது ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்ளும் விதமாக இருந்து வருகிறது. என்னை பொறுத்தவரை சுனிதா வில்லியம்ஸ் உடல், மன நலத்தில் சிறப்பாக உள்ளார். இதையெல்லாம் தாண்டி செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் செல்ல 9 மாதங்கள் ஆகும். அது வரைக்கும் மனிதன் உடல் இருக்க முடியுமா என்ற கேள்விக்குறி இருந்து வந்தது. இந்த காலதாமதம் இருக்க முடியும் என்பதை உணர்த்துகிறது. குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து குறைந்த எரிபொருளுடன் சிக்கனமாக அனுப்ப முடியும். அடுத்த 2 ஆண்டுகளில் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வர முடியும்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் சென்று வரும் அனைவருக்கும் புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் நடைபயிற்சி உள்ளிட்டவை மாறுபடும். எனவே, முறையான பயிற்சி பெற்றவர்கள் தான் விண்வெளிக்கு சென்று திரும்பி வருகின்றனர். விண்வெளிக்கு செல்வதற்கு எப்படி பயிற்சி பெறுகிறார்களோ, அதுபோல பூமிக்கு திரும்பி வந்த பிறகும் அவர்களுக்கு நடைமுறை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுனிதா வில்லியம்ஸ் ஏற்கெனவே 3 முறை விண்வெளி மையத்திற்கு சென்று வந்தவர். 10 நாளில் திரும்ப வர வேண்டிய அவர் விண்கல பிரச்சினையில் பூமிக்கு திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பி வருகிறார். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் விஞ்ஞானிகளுக்கு திரும்ப நடைமுறை வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்வது பழக்கமாக சில நாட்கள் ஆகும்.

புவி ஈர்ப்பு விசை குறைந்ததால் அதிகமாக இதயம் வேகமாக துடிக்கும். எனவே, உடனே நடக்க வைக்க மாட்டார்கள். முதலில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்களுக்குப் போதிய பயிற்சி வழங்கப்பட்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை ககன்யான் திட்டத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 3, 4 ஆண்டுகளில் விண்வெளி வீரர்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆள் இல்லாத விண்கலம் 2 ஆண்டுகளில் செலுத்தப்படும். ஆள் இல்லாத விண்கலங்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவால் கல்வியில் மாற்றம் ஏற்படும். செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்றபடி மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் தயாராகி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கே.மைதிலி, மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாலதி, சர்க்கார் சாமக்குளம் வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்பாபு, பள்ளி மேற்பார்வையாளர் பூங்கொடி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT