கோப்புப்படம் 
தமிழகம்

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு பணப்பலன் - உடனே அமல்படுத்த பேரவையில் இந்திய கம்யூ. வலியுறுத்தல்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு பணப்பலன் நடைமுறையை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., டி.ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமச்சந்திரன் (தளி தொகுதி) பேசியது: “நிதிப் பகிர்வில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து அதிக வரி வருவாய் மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால், உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்கிறது. தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதியை வழங்கவில்லை.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்கிறது. தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிலுவைத் தொகையை நமது எம்.பிக்கள் கேட்டால் நாகரிகம் இல்லாதவர்கள் என்று மத்திய அமைச்சர் விமர்சிக்கிறார். மத்திய அரசு தமிழகம் மீதும், தமிழர்கள் மீதும் தொடர்ந்து வன்மம் காட்டி வருகிறது. மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிராக செயல்படுகிறது.

அரசு பணிகளில் 40 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்டும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் அரசு துறைகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த காலியிடங்களையும் அரசு படிப்படியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

மேலும், அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை (ஈ.எல்) சரண் செய்து பணப்பலன் பெறும் திட்டம் 1.4.2026 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT