தீ விபத்தால் சேதமடைந்துள்ள தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், 630 மெகாவாட் மின்சார இழப்பை தடுப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் கடந்த 15-ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில், 1 மற்றும் 2-வது அலகுகளுக்கான கட்டுப்பாட்டு அறை அருகே பல அடுக்குகளாக அமைக்கப்பட்டிருந்த கேபிள் பகுதியில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ மளமளவென அந்த பகுதி முழுவதும் பரவியது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கேபிள்கள், சாதனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று அலகுகளிலும் மொத்தம் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், நேற்று காலை தூத்துக்குடி அனல்மின் நிலையத்தை பார்வையிட்டனர். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. அதுபோல், பாய்லர், மின்சாரம் உற்பத்தி செய்யும் டர்பைன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை. மின்சார கேபிள்களில் தான் சேதம் ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த 1 மற்றும் 2-வது அலகுகளை சீரமைக்க, 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகலாம். மிக விரைவில் சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
3-வது அலகில் குறைந்த அளவிலான பாதிப்புகளே உள்ளன. மின் உற்பத்தியில் தூத்துக்குடி அனல்மின் நிலையம் மிகவும் முக்கியமானது. இதனால் சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும், ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.