ராமேசுவரம்  வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்களின் காத்திருப்பு போராட்டம் 
தமிழகம்

ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டம்

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் வெளியூர் பெர்மிட் ஆட்டோக்களை தடை செய்யக் கோரியும், பைக் வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திங்கட்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிஐடியு, ஏஐடியுசி ஆட்டோ சங்கங்கள் ஒருங்கிணைப்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்புப் போராட்டம் குறித்து சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் மாவட்ட துணை தலைவர் செந்தில் கூறும்போது, ''ராமேசுவரத்தில் இயங்க அனுமதிக்கப்பட்ட ஆட்டோக்களை தவிர்த்து கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட வெளியூர் பர்மிட் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சட்ட விரோதமாக வாடகை பைக்களும் இயக்கப்படுகின்றது. இதனால் ராமேசுவரத்தில் போக்குவரத்து நெரிசலுடன், வாகன விபத்துகளும் அதிகரித்து வருவருகிறது.

ராமேசுவரத்தில் வெளியூர் ஆட்டோக்களை தடை செய்வதுடன், வாடகை பைக் விடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ராமேசுவரத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள ஆட்டோக்களுக்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும்'', என தெரிவித்தார். இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டத்தினால் ராமேசுவரத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் இயங்காததால் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் பாதிப்படைந்தனர்.

SCROLL FOR NEXT