தமிழகம்

புதிய மதுபான ஆலைகளுக்கு எதிர்ப்பு - புதுவை சட்டப்பேரவையில் காங்கிரஸ் வெளிநடப்பு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதிய மதுபான ஆலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்தனர்.

புதுவை சட்டப்பேரவையில் பூஜ்ய நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் வைத்தியநாதன் எழுந்து பேசினார். அவர் பேசும்போது, “புதுவையில் புதிதாக மதுபான ஆலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதற்கு துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கக்கூடாது. மதுபான ஆலைக்கு அனுமதி வழங்குவதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்” எனக்கூறினார்.

அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகிய இருவர் மட்டுமே வெளியேறினர். திமுக உறுப்பினர்கள் 6 பேரும் பேரவையில் அமைதியாக இருந்தனர். ஏற்கெனவே மதுபான ஆலை விவகாரத்தில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, காங்கிரஸ் இடையே முரண்பாடு நிலவுகிறது.

புதிய மதுபான ஆலைகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக சட்டப்பேரவையிலேயே ஆதரவு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக இன்றைய வெளிநடப்பு நடந்தது.

SCROLL FOR NEXT