தமிழகம்

மக்களின் ஜனநாயக உரிமையை வேரறுக்க துடிக்கிறது பாசிச திமுக அரசு: வானதி சீனிவாசன்

இல.ராஜகோபால்

கோவை: டாஸ்மாக் மதுபான ஊழலை கண்டித்து கோவையில் இன்று நடைபெற இருந்த முற்றுகை போராட்டத்திற்கு சென்ற பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

'டாஸ்மாக்' மதுபான கடைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக மத்திய அமலாக்கத்துறை அறிவித்த நிலையில் இந்த முறைகேட்டை கண்டித்து, தமிழக டாஸ்மாக் மதுபான நிலையங்களில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி, தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோவையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற வானதி சீனிவாசனை போலிஸார் கைது செய்தனர்.

இது குறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “மக்களின் ஜனநாயக உரிமையை வேரறுக்க துடிக்கும் பாசிச திமுக அரசே. உங்களின் கேடுகெட்ட டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அறவழியில் போராட முயன்ற பாஜக தலைவர்களையும் தொண்டர்களையும் வீட்டுச் சிறையில் வைப்பதும், அடிப்படையின்றி அவர்களைக் கைது செய்வதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அராஜகத்தின் உச்சம், ஆணவத்தின் மிச்சம்.

நமது நாட்டு பிரதமரின் உருவப்படங்களை எரிக்கும் பயங்கரவாதிகளையும், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கலவரத்தை தூண்ட முயலும் குற்றவாளிகளையும் உடனே கைது செய்யாமல், அவர்களுக்கு போலிஸ் பாதுகாப்புடன் முழு அனுமதி கொடுத்துவிட்டு, அறத்தின் வழியே அமைதியாகப் போராட நினைக்கும் பாஜக-வினரை உடனுக்குடன் கைது செய்து ஒடுக்குவது பாசிசமேயன்றி வேறில்லை.

இவ்வாறு, அடக்குமுறைகளால் அறத்தை வீழ்த்திவிடலாம் என்று தப்புக்கணக்கு போடும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் மக்கள் நலனை முன்னெடுக்கும் தேசியவாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் அல்ல. எனவே, உங்கள் கைதுகளும் கைவிலங்குகளும் எங்கள் மனஉறுதியின் நிழலைக் கூட அசைத்துவிட முடியாது, இந்தக் களத்தில் நாங்கள் உள்ளவரை நீங்கள் என்னதான் முயன்றாலும் உங்கள் ஊழல் கறையை மறைத்துவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT