கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள பெருக்கஞ்சேரி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான போலீஸார் நேற்று அப்பகுதிக்குச் சென்று தீவிர சாராயத் தடுப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை போலீஸார் கண்டுபிடித்தனர். போலீஸாரை கண்டதும், சாராயம் காய்ச்சிய 3 பேர் அங்கிருந்து தப்பியோடினர். அதில் சிந்தாமணி என்ற பெண் மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். முருகேசன் என்பவர் தப்பியோடி தலைமறைவானார்.
இதையடுத்து போலீஸார் அங்கிருந்து 12 லிட்டர் எரி சாராயம் மற்றும் 160 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அழித்தனர். இதைத்தொடர்ந்து சிந்தாமணி மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவத்தைத் தொடர்ந்து கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க போலீஸார் கடும் முயற்சி மேற்கொண்டு வரும் சூழலில், அப்பகுதியில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.