தமிழகம்

‘நெல்லை மண்ணின் இலக்கிய முகங்களில் ஒருவர்’ - நாறும்பூநாதனுக்கு முதல்வர் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் நெல்லை மண்ணின் இலக்கிய முகங்களில் ஒருவரென்று முதல்வர் அவருக்கு புகழ்ஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நாறும்பூநாதன் நெல்லை வட்டாரத்தை மையப்படுத்திய தனது இலக்கியப் படைப்புகளாலும், சமூகச் செயற்பாடுகளாலும் நன்கு அறியப்பட்ட முற்போக்கு இயக்க எழுத்தாளராக விளங்கியவர். நமது அரசு நடத்தும் பொருநை இலக்கியத் திருவிழாவிலும் அவர் மிக முக்கியப் பங்காற்றினார் என்பதை நன்றியோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

நாறும்பூநாதனின் இலக்கியப் பங்களிப்புகள், சமூகச் செயற்பாடுகள், பள்ளி மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கான அவரது முன்னெடுப்புகள் ஆகிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி 2022-ம் ஆண்டுக்கான உ.வே.சா. விருதினை நமது அரசின் சார்பில் வழங்கியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மண்ணின் இலக்கிய முகங்களில் ஒருவரான எழுத்தாளர் நாறும்பூநாதனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல், இலக்கியத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT